நடுரோட்டில் ஓட்டுநர் தீக்குளித்து அங்குமிங்கும் ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டத்திலுள்ள அமானி கொண்டலாம்பட்டியில் அர்ஜூனன் என்பவர் வசித்துவருகிறார். இதற்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதிக்கு தனது சரக்கு வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் சந்தோஷின் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது சந்தோஷ் மது போதையில் இருந்ததாக கூறி காவல்துறையினர் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் ஒரு கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து நடுரோட்டில் தனது உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மேலும் பற்றி எரியும் தீயுடன் சந்தோஷ் சாலையில் அங்கும் இங்கும் ஓடியதால் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சந்தோஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் உடலில் பற்றி எரியும் தீயுடன் சந்தோஷ் சாலையில் ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.