உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதனை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில் போர் காரணமாக இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ரஷ்ய படைகள் முக்கியமான நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதே சமயம் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த போர் காரணமாக இதுவரையிலும் 25 லட்சம் மக்கள் அகதிகளாகி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா போன்றவற்றில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷ்ய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே சமயம் வடக்கு மற்றும் கீவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர்.
இதில் ரஷ்ய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் உக்ரைனில் போர் தாக்குதல்களுக்கு மத்தியில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். தலைநகர் கீவின் வட மேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் பலத்த காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.