தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மாநில மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக ரூபாய் 10 ஆயிரம் வரை ஒவ்வொரு ஆராய்ச்சி திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் மாணவர்களின் ஆராய்ச்சி குறித்து விபரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதேபோன்று சிறந்த திட்டங்களுக்குப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2021-2022 ஆம் வருடத்துக்கான மாணவர் ஆராய்ச்சி திட்டங்களுக்கு 11,546 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. இவை மன்றத்தின் துறை வல்லுநர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட 1,071 திட்டங்களுக்கு நிதியாக ரூபாய் 80 லட்சத்து 32,500 வழங்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் மாணவர் ஆராய்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை மொத்தம் 7,439 திட்டங்களுக்கு ரூபாய் 5 கோடியே 57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.