குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்பத்தை ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் அதற்காக டிஎன்பிஎஸ்சி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இரண்டு வருடங்களாக அரசு தேர்வு அறிவிப்ப காத்திருந்த பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி குரூப்-2 தேர்வுக்கான அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை அடிப்படையில் தேர்வுக்கு பலரும் தயாராகி வருகின்றனர். இதில் 5,831 காலி பணியிடங்களுக்கு குரூப் 2 குரூப் 2-ஏ தேர்வும் , 5,255 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வும் நடைபெற உள்ளது. குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த குரூப் 2 தேர்வுக்கு இம்மாதம் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இருப்பினும் விண்ணப்பித்த பிறகு விண்ணப்பத்தில் சில தகவல்களை தவறாக பதிவு செய்து விட்டதாகவும், அந்த தவறுகளை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் விண்ணப்பங்கள் திருத்தம் செய்துகொள்ள டிஎன்பிஎஸ்சி மீண்டும் வாய்ப்பை வழங்கியுள்ளது.அதன்படி, மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள்,தேர்வுக்கான இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையவழி விண்ணப்பத்தில் உள்ள தகவல்களில், ஒரு சில தகவல்கள் தேர்வரின் ஒரு முறை நிரந்தரப் பதிவில் (OTR)இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவை, எனவே இந்த மாதிரியான தகவல்களை EDIT செய்வதற்கு முதலில் தேர்வர்கள் தங்கள் ஒருமுறை நிரந்தரப் பதிவில் (EDIT PROFILE) சென்று உரிய திருத்தங்களை செய்து அவற்றைச் சேமிக்க வேண்டும்.
2. இதனை தொடர்ந்து, விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள EDIT ல் சென்று, விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் விவரங்களை திருத்தம் செய்து, இறுதியாக சேமித்து, அதை சமர்ப்பித்து (SUBMIT), அதற்குரிய நகலினை அச்சுப் பிரதி (Print Out)எடுத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தில் திருத்தம் செய்த பிறகு, திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமர்பிக்க வில்லை என்றால், தேர்வர் இதற்கு முன்பு சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
4.திருத்தம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், உரிய தேர்வுக் கட்டணத்தை இணைய வழியாக செலுத்தவும். ஏற்கனவே செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. இந்த எளிய நடைமுறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை திருத்திக் கொள்ளலாம்.