கொடைக்கானலில் சில நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பதற்காக உழவர் பவுண்டேஷனை தொடங்கி பல விஷயங்களை செய்து வருகின்றார். இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு தீ ஏற்பட்டு பயங்கரமாக எரிந்து வருகிறது. இதனால் மூலிகைகள், அங்கு வாழும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. இதைக் கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி பொதுமக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “கோடை வெயிலுக்கு இதமாக இருப்பது இயற்கை வளங்கள்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கனவு தேசமாக இருப்பது காடுகள்தான். பறவைகள், விலங்குகள், தாவரங்கள் வாழும் அந்த காட்டுப் பகுதியை காப்பாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும். எளிதாக தீ பற்றிக் கொள்ளும் பொருள்களை காடுகளுக்குள் எடுத்துச் சொல்லும்போது தீப்பற்றினால் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவற்றுக்கு அபாயம் ஏற்படும். ஆகையால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். காட்டுத்தீக்கு எதிரான போரில் வனத்துறைக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து நாமும் காடுகளை காப்போம்” என்று கூறியுள்ளார்.