பொதுவாக வட்டார இலக்கியங்கள் பெரும்பாலும் நமது வாழ்வை நகல் எடுப்பவையாகவே உள்ளது. குறிப்பாக ஆர்.சண்முகசுந்தரத்தின் “நாகம்மாள்”, ராஜம் கிருஷ்ணனின் “குறிஞ்சித்தேன்”, “கரிப்பு மணிகள்”, சி.சு.செல்லப்பாவின் “வாடிவாசல்”, ச.பாலமுருகனின் “சோளகர் தொட்டி” ஆகிய வட்டார இலக்கியங்கள் முக்கியமானவை ஆகும். பாமா, இமையம், பெருமாள் முருகன், ஜோ டி குரூஸ் உள்ளிட்டோர் வேளாண், மீனவ, பழங்குடியினச் சமூகங்களை மையமாகக் கொண்டு எழுதி வருகின்றனர். அந்த அடிப்படையில் உத்தமசோழனின் “சுந்தரவல்லி சொல்லாத கதை”, கீழத்தஞ்சையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் ஆகும். சுமார் 90 வருடங்களுக்கு முன்பு வேளாண் குடிகளாக வாழ்ந்த மக்களின் கதை இதுவாகும்.
உத்தமசோழனின் மொழிநடை, வட்டார வழக்கைத் தாங்கி வருவதோடு அவருடைய கதைகூறும் பாங்கு அதன் எளிமையினால் தனித்துவம் மிகுந்து ஒளிர்கிறது. கிராமங்களில் எந்தவிதமான அளவுக்குச் சாதியும் பெண் அடிமைத்தனமும் நிறைந்திருக்கிறது என்று கருதுகிறோமோ, அதே அளவு சாதிக் கட்டுப்பாடுகளை மீறிய செயல்பாடுகளும் பாலினச் சமத்துவச் செயல்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுவதும் உண்டு. அது இந்த நாவலில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. எந்தக் கோட்பாட்டையும் கொள்கையையும் கிராமவாசிகள் படித்தவர்கள் அல்ல. அவர்களின் வாழ்க்கையே அவர்களை வழிநடத்தும் கோட்பாடு மற்றும் கொள்கை ஆகும்.
காடு, மேடுகளில் வேலை செய்து, கால்நடைகளை வளர்த்து, பால்பொருட்களை உற்பத்திசெய்து, காய்கறித் தோட்டங்களை அமைத்துத் தற்சார்பு வாழ்க்கை வாழும் கிராமப்புறப் பெண்கள், சமத்துவம் பேசும் நகர்ப்புறப் பெண்களுக்கு நிச்சயம் முன்னுதாரணமாக இருக்கின்றனர். சாதி எல்லைகளைக் கடந்து பட்டியலினச் சமூகப் பெண்ணான முல்லையம்மாவைத் தங்களது தாயைப் போன்று எண்ணும் சுந்தரவல்லியும் கதிரேசனும் எந்தப் பாசறையில் சாதி மறுப்பைப் படித்திருப்பார்கள்?.. என்பது கேள்வி குறியாக இருக்கிறது.
ஒருபிடி நெல்கூடக் கையிருப்பு இன்றி, நிலமற்ற விவசாயிகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் கதிரேசன்-சுந்தரவல்லி தம்பதியினர் நில உரிமையாளர்களாக மாறுவதற்கு அவர்களுடைய உழைப்பே காரணமாக உள்ளது. குறிப்பாக சுந்தரவல்லியின் நெஞ்சுரமும் உறுதியுமே காரணம் ஆகும். சிறு வயதிலேயே தன் தாயை இழந்து ராசி அற்றவளாகக் கருதப்பட்டு, ஊராரின் ஏளனத்துக்கு ஆளானவளின் வைராக்கியம் தான் அது. முதலாளிக்கு விசுவாசமானவனாகவும் கடும் உழைப்பாளியாகவும் உள்ள கதிரேசன் முற்போக்கானவன்தான். மேலும் சில நேரங்களில் முரடனாகவும் இருக்கிறார்.
அவன் மனச்சோர்வடையும்போது தாயைப் போன்று அரவணைத்துக் கொள்ளும் சுந்தரவல்லி, பிற பெண்கள் மேல் அவன் நாட்டம் கொள்ளும்போது, புயலென மாறி அந்த முரடனை மிரளவும் வைக்கிறாள். இவ்வாறு சவால்கள் அடங்கிய வேளாண் தொழிலைச் செய்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லிச் செல்லும் இந்த நாவல், ஒரு வட்டார இலக்கியத்துக்கே உரிய இலக்கணத்தைக் கொண்டுள்ளது.
மழை, ஆறுகள், தட்பவெப்பம், நெல் பயிரிடும் முறை, மரங்கள், உணவு, திருமண முறைகள், மருத்துவ முறைகள், திருவிழாக்கள் என்று ஒரு வேளாண் சமூகத்து வாழ்வில் கடக்க நேரிடும் தனித்துவமான அனைத்தையும் அகராதியைப் போன்று விரிவாகக் கதையினூடாக உத்தமசோழன் சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டின் எத்திசையில் வாழும் வேளாண் குடியும் இந்த நாவலை வாசித்தால் தஞ்சையில் வந்து விவசாயம் செய்து விடலாம். இந்த நாவல் குளிர்க் காற்று முகத்தில் வீசும் காலைப் பொழுதில் பூஞ்சாம்பலால் பல் தேய்த்துக் குளத்தில் தலைமுழுகி, கள்ளிச் சொட்டாட்டம் பாலில் வெல்லமிட்ட தேநீரைப் பருகும் உணர்வைத் தரும். – ஜே.எஸ்.அனார்கலி கவிஞர்