குருக்ஷேத்திரத்தில் உள்ள இளைஞர்கள் குழு பைகளை கொண்டு ஆமை பொம்மையை உருவாக்கி பிளாஸ்டிக்குகளை தவிர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் உள்ள இளைஞர்கள் குழு ஒன்று 87 ஆயிரத்தி 297 பிளாஸ்டிக் பைகளை கொண்டு ஆமை பொம்மையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்குமாறு அக்குழு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட அந்த ஆமையின் உயரம் 6.6 அடியாகும். நீளம் 23 ஆடியாகும்.
குருக்ஷேத்திராவை சேர்ந்த மாணவி ரிது, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சேர்ந்து இந்த ஆமையை உருவாக்கியுள்ளார். நாளந்தா சர்வதேச பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் ஆய்வில் முதுகலை பட்டப்படிப்பை அவர் முடித்துள்ளார். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பூச்சிக்கொல்லிகள் ஆகியவை மனித இனத்தின் மீது எவ்வாறெல்லாம் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ரிது ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார்.
21 ஏப்ரல், 2012ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட ஆக்டோபஸ் பொம்மையே உலக சாதனையாக இருந்துவருகிறது. அந்த சாதனையை முறியடிக்கும் வண்ணம் இந்த ஆமை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
இதுகுறித்து ரிது கூறுகையில், “100 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையின் உயிர் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசால் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. மனித இனம் மட்டுமல்ல தண்ணீர், நிலத்தில் வாழும் விலங்குகள் என எவற்றாலும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமையிலிருந்து தப்பிக்க முடியாது” என்றார்.