சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காணிக்கைபுரம் கிராமத்தில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிஷேக் பள்ளிக்கு சென்று மதிய இடைவேளையில் உணவு சாப்பிட்டு உள்ளான். இதனையடுத்து அபிஷேக்கும், அவனது நண்பனான மற்றொரு மாணவனும் இணைந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கால் கழுவ ஏரியில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக அபிஷேக் தண்ணீரில் விழுந்து மூழ்கி விட்டான்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஏரிக்குள் இறங்கி சிறுவனை தீவிரமாக தேடினர். ஆனாலும் சிறுவன் கிடைக்காததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தேடி வருகின்றனர்.