தஞ்சை மாவு மில்லில் 500 கிலோ ரேஷன் அரிசியை மறைத்து வைத்திருந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாவட்டங்களுக்கு கடத்தல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதை தடுப்பதற்காக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைப்போல தஞ்சை மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேசன் அரிசி மறைத்து வைத்திருப்பதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள மாவு மில்லில் 10 மூட்டைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மொத்தமாக 500 கிலோ அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரித்த போது தஞ்சை பாரதி நகர் பகுதியை சேர்ந்த கௌரிசங்கர்(69) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விசாரணையில் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுகள் மூலம் பொதுமக்கள் வாங்கிய அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.