ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவு பொருட்களின் விலையை உயர்த்தக் கூடும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்ற நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் தங்களின் வர்த்தக மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோகோ-கோலா,மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்றவை ரஷ்யாவிற்கு தங்களின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
ரஷ்யாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பெப்சி நிறுவனம் அங்கு தனது வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளதோடு, உக்ரைன் அகதிகளுக்கு தேவையான உதவிகளையும் வழங்குவோம் என கூறியுள்ளது. அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஸ்டார்பக்ஸ் ரஷ்யாவில் உள்ள தனது 130 விற்பனை நிலையங்களில் இருந்தும் லாபத்தை உக்ரைனில் மனிதாபிமான உதவிகள் வழங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில் தனது முடிவை மாற்றி ரஷ்யாவில் அனைத்து விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடுவதாக கூறியுள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவு பொருட்களின் விலையை அதிகரிக்க கூடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட அரசாங்க கூட்டத்தில் “ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகள் உலக அளவில் அதிக அளவு உரங்களை உற்பத்தி செய்து வருகிறோம். எங்கள் பொருட்களை வழங்குவதற்கான நிதி மற்றும் தளவாடங்கள் அவர்களது தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கினால் அதன் விலை உயரும் இது இறுதி தயாரிப்பான உணவுப் பொருட்களை கடுமையாக பாதிக்கும்” எனவும் கூறியுள்ளார்.