தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இம்மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் அதற்கு தகுந்த நடவடிக்கையை தயக்கம் காட்டாது காவல்துறையினர் உடனே எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பின் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் அனுமதிக்க கூடாது. மேலும் ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் இன்றைய மாணவர்களின் வழிகாட்டியாக திகழ வேண்டும் எனவும் அனைவரும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாநாட்டில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை காவல் துறை அலுவலர்களுக்கான கூட்டம் மற்றும் சாதனை புரிந்த அதிகாரிகளுக்கான விருதுகளும் வழங்கப்படுகிறது. வனத்துறைதுறை அலுவலர்கள் 2018 ஆம் ஆண்டிற்குப் பின் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.