மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவ முகாம் வருகிற 22-ம் தேதி ராஜா மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ஆம் தேதி கடியபட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 24-ம் தேதி முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 25-ம் தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 26-ம் தேதி திருவட்டார் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 28-ம் தேதி நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் நடைபெறவிருக்கிறது. இதைத்தொடர்ந்து 29-ம் தேதி கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 30-ம் தேதி மேல்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 31-ஆம் தேதி தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவிருக்கிறது.
இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான அடையாள அட்டைகள் வழங்குதல், உதவி உபகரணங்கள், கல்வி உதவி தொகை, மருத்துவ உதவிகள், சிறப்பு தேவைகளை கண்டறிதல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த மருத்துவ முகாமை சுகாதாரத்துறை, ஒருங்ணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்துகிறது. இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கூறியுள்ளார்.