ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையால் உக்ரைனை ஒரு பொழுதும் தோற்கடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது 14வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவால் உக்ரைனை ஒரு போதும் வீழ்த்த முடியாது என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ரஷ்ய அதிபர் புதினால் ஒரு நகரத்தை கைப்பற்ற முடியும். ஆனால் நாட்டையே வீழ்த்த முடியாது. ரஷ்ய அதிபரால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. இந்த தொடர் தாக்குதலால் ரஷ்யா அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உக்ரைன் எல்லையில் உள்ள அகதிகள் பராமரிக்கப்பட்டு மற்றும் அந்நாட்டுக்கு உதவியாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் புதினின் இந்த போர் நடவடிக்கையால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பெரிய அளவில் துன்பப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் என்ன விலை கொடுத்தாலும் புதின் தனது கொலைகார பாதை தொடர்வதில் உறுதியாக இருக்கிறார். இதனை தொடர்ந்து உக்ரைன் மக்களும் துணிச்சலாக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். வன்முறை, அடக்குமுறை, கொடுங்கோல் மூலம் அடிபணிய செய்யும் செயல்களுக்கு எதிராக நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். இதனை தொடர்ந்து புதினின் இந்த போரால் வரலாற்றை எழுதும்போது ரஷியாவை பலவீனமாகவும், உலக நாடுகளை வலுவானதாகவும் காட்டும்” என்று கூறியுள்ளார்.