இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தடைந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள செங்கமடை பகுதியில் கார்த்திக்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் இரு சக்கர வாகனத்தில் ஆர்.எஸ் மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.