எதிர்பார்த்ததைவிட செவ்வாய் கிரகம் தன்னிடம் இருக்கும் தண்ணீரை வேகமாக இழந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகம் தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் பிரான்சின் சி என் ஆர் எஸ் எஸ் என்னும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியிலுள்ள வளிமண்டலத்தில் நீர் மூலக்கூறுகள் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
நீருக்கான வேதியல் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் ஆக்சிஜன் அணுக்களாக சூரிய ஒளி பிரித்து விடுவதாகவும், செவ்வாய் கிரகத்தின் பலவீனமான ஈர்ப்பு விசையால் வேகமாக ஆவியாகி விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாயின் வளி மண்டலத்தில் 80 கிலோ மீட்டர் உயரத்தில் நீராவி இருந்ததாகவும் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் நீராவி தற்போது குறைந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.