கடலூரில் வேலை பார்த்த நகை கடையிலையே ஊழியர் 104 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சான்றோர் பாளையம் பகுதியை அடுத்த காந்தி நகரில் வசித்து வருபவர் கலைச்செல்வம். இவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். நாள்தோறும் கடை மூடும் சமயத்தில் ஊழியர்களிடம் இருந்து நகையை பெற்று அவற்றை சரிபார்த்து லாக்கரில் வைப்பதே இவரது பணி.
அந்த வகையில் 6 வருடங்களாக அந்த நகை கடையில் பணி புரிந்து வரும் கலைச்செல்வம் ஞாயிற்றுக்கிழமை உட்பட விடுமுறை எடுக்காமல் வேலைக்கு சென்றுவிடுவார். ஆனால் கடந்த ஒரு மாதமாக எந்தவித அறிவிப்புமின்றி விடுப்பு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது சந்தேகம் வர கடை உரிமையாளர் அவரது லாக்கரை சோதனையிட்டார். அதில் சுமார் 100 பவுன் நகை காணாமல் போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட, புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து கலைச் செல்வத்தை அதிகாரிகள் தேடிவந்தனர். இதையடுத்து கடலூரில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்கையில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்து 97 பவுன் நகையும் இரண்டு எல்சிடி டிவி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடை உரிமையாளரிடம் நம்பிக்கை பெற்று அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கைக்காக 104 பவுன் நகையைத் திருடி அதை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை செலவழித்துள்ளார் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் சமீபத்தில் தனது நண்பர்களுக்கு ரூபாய் ஒரே நாளில் ரூ10,000 செலவு செய்துகொண்டாடியது குறிப்பிடத்தக்கது.