தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த 2021ஆம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் ஆட்சிக்கு வந்ததும் நிதி நெருக்கடி காரணமாக அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி அளிக்க முடிவு செய்யப்பட்டு, 5 சவரன் அளவு உள்ள நகைகளை வைத்து கடன் பெற்றவர்களிடம் விபரங்களை சேகரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.
இதை அடிப்படையாக வைத்து கடன் தள்ளுபடி பெற தகுதியானோர் மற்றும் தகுதியற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலின்படி 13,47,33 பேர் நகைக்கடன் பெற தகுதியானவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். மீதமுள்ள 35 லட்சம் பேர் நகைக்கடன் பெற தகுதியற்றவர்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் உள்ள படி அனைவரது நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பிற கட்சியினர் நகைக்கடன் தள்ளுபடி இன்னும் வழங்காததை சுட்டி காட்டினர்.
அதனை தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணிகளானது தொடங்கியது. முன்னதாக நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் நகைக்கடன் தள்ளுபடி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தேர்தல் விதிமுறைகள் திருப்ப பெறப்பட்டதை தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் நேற்று (மார்ச்.6) முதல் பயனாளிகள் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகைக் கடன் பெற்று இருப்பவர்களை வட்டி செலுத்துமாறு கூறும் கூட்டுறவுசங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.