2 பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்த நபர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் பகுதியில் விளானூர் கிராமத்தில் கணவனை இழந்த பஞ்சவர்ணம் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பஞ்சவர்ணம் சிவகுமாருக்கு 1 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பஞ்சவர்ணம் திருப்பித் தருமாறு சிவகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் சிவகுமார் அந்த பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளார். இதனால் பஞ்சவர்ணத்திருக்கும் சிவகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதுகுறித்து சிவகுமார் தன்னுடன் வேலை பார்த்த குமுளூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, மணிப்பூரை சேர்ந்த லல்லும்பாய் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து காளிமுத்து பஞ்சவர்ணத்துடன் பழக்கம் ஏற்படுத்தி உங்களுடைய பணத்தை சிவகுமார் இடம் இருந்து வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக பஞ்சவர்ணத்தை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடகீழ் குடி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குவைத்து சிவகுமார், காளிமுத்து, லல்லிம்பாய் ஆகிய 3 பேரும் பஞ்சவர்ணத்தை கொடூரமான முறையில் கொலை செய்து புதைத்துள்ளனர். இதுகுறித்து பஞ்சவர்ணத்தின் மகன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்து, சிவகுமார், லல்லிம்பாய் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அதாவது காளிமுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு குமுளூர் கிராமத்தைச் சேர்ந்த கனகாம்பாள் என்பவரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்கு கரூர் காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்துவந்தது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பஞ்ச வர்ணத்தை கொலை செய்ததற்காக சிவகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்பிறகு லல்லிம்பாய்க்கு 1 ஆயுள் தண்டனையும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 2 பெண்களை கொலை செய்ததற்காக காளிமுத்துவுக்கு 3 ஆயுள் தண்டனையும் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.