Categories
மாநில செய்திகள்

கருணை அடிப்படையில் பணி நியமனம்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட பணியை  22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிய போது தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதாரத்துறை நிறுவனத்தில் ஊழியராக 1986ல் நியமிக்கப்பட்ட அவர் ஏற்கனவே அதே துறையில் அவரது சகோதரர் பணியாற்றுவதை மறைத்து விட்டதாக கூறி 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி நீக்கம் செய்ய பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே அவர் உயிரிழந்துவிட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அந்த வழக்கை தொடர்ந்து நடத்தினார். மேலும் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி 22 ஆண்டுகள் பணியாற்றி உள்ள நிலையில் திடீரென பணி நீக்கம் செய்தது அவரது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என கூறி அவரது பணி நீக்க உத்தரவை ரத்து செய்து அவருக்கு சேர வேண்டிய பணி ஓய்வு பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை துணை இயக்குனர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமதுரபிக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு உத்தரவின்படி கருணை அடிப்படையில் ஒரு ஊழியரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க முடியும் எனவும் மற்றொரு உறுப்பினருக்கு வழங்க முடியாது என்றும் அரசு தரப்பில் விவாதிக்கப்பட்டது.

மேலும் நாகராஜன் 22 ஆண்டுகள் பணியாற்றி உள்ள நிலையில் ஏற்கனவே அவரது சகோதரர் பணியாற்றி வருவதாக கூறி திடீரென பணிநீக்கம் செய்திருக்கக் கூடாது என தெரிவித்துள்ள நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை.  நாகராஜனுக்கு சேரவேண்டிய ஓய்வுக்கால பலன்களை அவரது வாரிசுகள் மூன்று மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு அரசு மேல்முறையீடு செய்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |