அரியலூரில் தாய், தந்தை, பாட்டி என அனைத்து சொந்தத்தையும் இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை அடுத்த நின்றியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது வயது 30. இவரது தாய் தந்தை இவரும் சிவாவின் சிறுவயதிலேயே இறந்து விட இவரது பாட்டி தான் இவரை இத்தனை காலமும் வளர்த்து வந்துள்ளார். தாய் தந்தை இல்லாத குறையை தீர்க்கும் அளவிற்கு அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்துள்ளார் சிவாவின் பாட்டி.
இந்நிலையில் அவரது பாட்டியும் இறந்து விட சொந்தம் பந்தம் என யாரும் இல்லாமல் ஆதரவற்ற அனாதையாய் தவித்த சிவாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து மனநிலை பாதிக்கப்பட்டவராக ஊர் முழுவதும் சுற்றி திரிந்த சிவா, நேற்று செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள சித்தேரி ஏரியில் தண்ணீர் குடிக்க செல்ல எதிர்பாராத விதமாக தவறி ஏரிக்குள் விழுந்தார்.
நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்க முயற்சித்தனர். ஆனால் மீட்பு பணி பயனளிக்காமல் ஏரிக்குள் அவர் மூழ்க, தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அவர்கள் இறந்தவரின் உடலை மீட்டு அவர் யார் என்பதை அறியும் வகையில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது ஊர் மக்கள் சிலர் தானாக முன்வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த அவர்களிடம் விசாரணை மேற்கொள்கையில், சிவா அவர்களின் குடும்ப விவகாரம் தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.