அதிமுகவின் சூப்பர் சீனியர்களில் ஒருவரான சையதுகான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “டிடிவி தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. அதிமுகவில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகளுடைய விருப்பமும் அதுதான். எனக்கு கடந்த 3 நாட்களாக தொலைபேசியில் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் இன்னும் 2 மாவட்டங்களில் கூட டிடிவி, சசிகலாவை அதிமுக கட்சியில் இணைக்க அனைத்து நிர்வாகிகளும் ஆசைப்படுகிறார்கள். அதேபோல் ஆதிராஜாராம் என்னை பழைய எஜமானர்களை கொண்டுவர துடிக்கிறார்கள், ஆதாயம்தேடிகள் என்று பேசியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
இன்னும் சொல்லப்போனால் சசிகலாவால் நாங்களா ஆதாயம் அடைந்தோம் ? கடந்த நான்கு வருடங்களாக ஓ.பன்னீர்செல்வமா முதல்வராக இருந்தார் ? அவரை சின்னம்மா தான் பதவியை விட்டு விலக சொன்னார். சசிகலாவால் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அதன் மூலம் ஆதாயம் அடைந்தார். சிலர் எங்களை, நீங்கள் சசிகலாவை இணைக்க கோரி முன்னெடுக்கும் நிகழ்வுகளை பார்த்து கட்சியில் இருந்து உங்களை நீக்கினால் என்ன செய்வீர்கள் ? என்று கேள்வி கேட்கிறார்கள். இந்த விஷயத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவர் மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு பெயர் நடவடிக்கை அல்ல. எடப்பாடி பழனிசாமியால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது.
கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸிடம் தேனி மாவட்ட நிர்வாகிகள் எங்களுடைய தரப்பு கருத்தை தெரிவித்துள்ளோம். அவரும் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இலக்கை அடையும் வரை இந்த குரல் எங்களிடமிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். தொண்டர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் நாம் முடிவு எடுக்க வேண்டுமே தவிர தொண்டர்களிடம் நமது முடிவை திணிக்கக் கூடாது” என்று ஈபிஎஸ்-க்கு சவால்விடும் வகையில் சையதுகான் பேசியுள்ளார்.