மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று (04.03.2022) நடைபெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களிலும் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக ஆகிய காட்சிகளுக்கான பேரூராட்சி, நகராட்சி பதவிகள் திமுகவினரால் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களின் வருத்தம் மற்றும் கோபத்தை திமுக தலைமைக்கு வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில். “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழகத் தலைமை அறிவிப்பை மீறி போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். அப்படி அவர்கள் விலகாவிட்டால் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இதனைத் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கட்சியின் பெயருக்கு களங்கத்தை விளைவித்தவர்கள் அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டு என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இந்த நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணை தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் திமுக கவுன்சிலர் பாண்டியன் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மு க ஸ்டாலின் உத்தரவால் பாண்டியன் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.