ஆடுமேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் அருணாச்சலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருணாசலம் தான் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றார். இதனையடுத்து வெகுநேரமாகியும் முதியவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமான 90 அடி கிணற்றில் ஆட்டுக்குட்டி சத்தம் கேட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அருணாசலத்தின் மகன் வெங்கடேஷ் உடனடியாக நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தத்தளித்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர். மேலும் கிணற்றில் இறங்கி தேடியதில் அருணாச்சலம் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தார். இதற்குப்பின்னர் அவரது உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.