இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது , ‘தற்போது ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் சிறந்த நிலையில் உள்ளோம். இதற்குரிய எல்லா பெருமையும் விராட் கோலியையே சேரும்.
அதேசமயம் அவர் விட்டு சென்ற இடத்திலிருந்து அணியை முன்னெடுத்து செல்வேன்.மேலும் அணியில் ரகானே, புஜாரா ஆகியோரின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. இந்திய அணிக்காக அவர்களுடைய பங்களிப்பை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.மேலும் வெளிநாட்டில் பெற்ற வெற்றிகள், டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது போன்ற எல்லாவற்றிலும் அவர்கள் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளனர்.
தற்போது அவர்கள் இருவரின் பெயரும் அணித்தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை அவ்வளவு தான். மற்றபடி அவர்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடவில்லை.எங்களது வருங்கால அணித்திட்டத்தில் நிச்சயம் அவர்கள் இருவரும் இருப்பார்கள் ‘ இவ்வாறு அவர் கூறினார்.