கேரளாவில் இறைச்சிக்காக சினை மாட்டை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் ஏருர் பகுதியின் குளத்துப்புழா என்னும் பகுதியை சேர்ந்தவர் சஜி (வயது41). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் தான் வளர்த்து வரும் பசுக்களை வழக்கமாக மேய்ச்சலுக்கு விடுவார். இந்நிலையில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளில் சினையாக இருந்த பசு ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது சம்பவத்தன்று அந்த எஸ்டேட் பகுதிக்கு சந்தேகப்படும்படியாக வாகனம் வந்ததாக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்இரக்குழி பகுதியைச் சேர்ந்த கமருதீன் (56), அவரது மகன் ரஜிப் (36) மற்றும் உறவினர் ஹிலாரி(48) ஆகிய மூவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின் இவர்கள் மூவர் தான் பசுவை சுட்டு கொலை செய்து பின்னர், அதன் உடலை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது.
இந்த செயலை நீண்ட நாட்களாகவே செய்து வரும் இவர்கள் வேட்டையாடும் பசுவை கறியாக்கி வெவ்வேறு இடங்களில் விற்பனை செய்வதும் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் ‘ஹங்கிரி கேப்டன்’ என்ற குக்கிங் சேனல் நடத்தி வரும் ரஜீஃப் மாடுகளை திருடி அதன் கறியை சமைக்கும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். யூடியூப் வீடியோவிற்க்காகவும், பணத்திற்காகவும் சினையாக இருந்த பசுவைக் கொன்ற இந்த மூவரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.