மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்க்கான மருந்துகளை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர்.
அதன்படி தேனி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை தெரிந்து அது தொடர்பான மருத்துவ உதவி, மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இதுவரையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக நோய் சிகிச்சை, நோய் தடுப்பு சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை என மொத்தம் 2 லட்சத்தி 15 ஆயிரத்து 599 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.