கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்திய கொடியால் தான் நான் உயிர் பிழைத்தேன் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தாவணகெரே மாவட்டம் பகத்சிங் நகரை சேர்ந்தவர் முகமது ஹபீப் அலி. உக்ரைனில் சிக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது பத்திரமாக கர்நாடகா திரும்பியுள்ளார். அவர் தாவணகெரேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” நான் உக்ரைனில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தேன். உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை அடுத்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நான் உட்பட பல மாணவர்கள் தங்கியிருந்தோம். விடுதியில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்டிருந்தேன். இதற்கு அனுமதி அளித்திருந்தனர்.
மேலும் இந்திய தேசியக் கொடியால் தான் நான் உயிர் பிழைத்தேன். இந்திய தேசியக் கொடியை பார்த்ததும் உக்ரைன், ரஷ்ய ராணுவ வீரர்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை. உரிய பாதுகாப்பு கொடுத்தனர். தேசியக் கொடியை பயன்படுத்த இந்தியாவை தவிர மற்ற மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக உக்ரேனில் பல்வேறு மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் என்னை போன்ற பிற மாணவர்களும் பத்திரமாக இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என அவர் கூறியுள்ளார்.