Categories
மாநில செய்திகள்

பெண்ணை காப்பாற்றும் போது உயிரிழந்த இளைஞர்…. குடும்பத்திற்கு ரூ 10,00,000 – முதல்வர் அறிவிப்பு.!!

திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முன்பதாக முதல்வர் பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் பலத்த காயமடைந்த சார்லி என்ற இளைஞர் குடும்பத்திற்கு ரூ 2,00,000 நிவாரணமும், மேலும் 3 இளைஞர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூரில் பவானி என்ற பெண்ணை ஆட்டோ டிரைவர் கடத்திச் சென்றபோது இளைஞர்கள் யாகேஷ், ஈஸ்டர், வினித், துரைராஜ் மற்றும் சார்லி ஆகிய 5 பேர் விரட்டி சென்றுள்ளனர். பின்னர் அந்த பெண் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பினார். இருந்தும் ஆட்டோவை மடக்கி பிடிக்க அந்த இளைஞர்கள் விரட்டி செல்ல, ஆட்டோ இடித்ததில் யாகேஷ் கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த யாகேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்ப சூழ்நிலை கருதி அந்த இளைஞனுடைய முயற்சியை பாராட்டும் வகையில் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |