பள்ளியின் ஓட்டுக்கூரையில் இருந்து மரக்கட்டை கீழே விழுந்ததில் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.வாகைக்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 45 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் 2 கட்டிடங்கள் உள்ள நிலையில் அதில் ஒரு கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை இடிப்பதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எஸ்.வாகைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.
ஆனால் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கபடாமல் இருந்துள்ளது. இதனையடுத்து சம்பவதன்று காலையில் பள்ளிக்கு வழக்கம்போல மாணவ-மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது பழுதடைந்த ஒட்டுக்கூரையில் இருந்த ரீப்பர் மரக்கட்டை திடீரென கீழே விழுந்துள்ளது. இதனால் அங்கு அமர்ந்திருந்த 4-ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி, 2-ம் வகுப்பு படிக்கும் மாணிக்கம், அகிலேஷ் கண்ணன் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆசிரியவர் உடனடியாக 3 பேரையும் மீட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்குரித்து சாயல்குடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த மரக்கட்டை நேரடியாக சிறுவர்கள் மீது விழாமல் சுவரில் பட்டு திரும்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.