போலீஸ் போல் வேடமணிந்து வழிப்பறி செய்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 2 பேர் அவரை மறித்துள்ளனர். அவர்கள் தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்பின் சங்கரிடம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளனர். அந்த ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி சங்கரின் மோட்டார் சைக்கிள் மற்றும் 2150 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் எஸ்.எஸ் காலணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து சதீஷ்குமார் என்பவர் தன்னுடைய கைபேசியை காவல் துறையினர் போல் வேடம் அணிந்து வந்த 2 பேர் பறித்துச் சென்றுள்ளதாக எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சங்கர் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரிடமும் ஒரே கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது. இந்த தகவலையறிந்த கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு அணையிட்டுள்ளார். எனவே இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை செய்து வழிப்பறி செய்த இப்ராஹிம் மற்றும் ரஞ்சித் பாபு ஆகியோரை கைது செய்துள்ளனர்.