சென்னையில் நேற்று முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த சமயத்தில் தூரத்தில் நின்றுகொண்டிருந்த சிறுமி ஒருவர் ராகுல் காந்தியை பார்த்து கையசைத்தார். இதனை அடுத்து ராகுல்காந்தி அந்த சிறுமியை உடனடியாக அழைத்து தனது மடியில் சில நிமிடங்கள் அமர வைத்து அந்த சிறுமியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
அதோடு அந்த செல்பியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதனால் அந்த சிறுமி ஒரே நாளில் பிரபலம் அடைந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் கூறியதாவது, “என்னுடைய மகள் ராகுல் காந்திக்கு அருகில் அமர்ந்து இருந்ததையும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டதை என்னால் நம்பவே முடியவில்லை. ராகுல் மிகவும் பணிவானவர். ராகுல் காந்தி என் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.” என அவர் கூறினார்.