உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், கடும் குளிரிலும் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சில மாணவர்களை அரசு இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருங்கல் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் தனது மகன் அஷ்வின் உக்ரைனில் ஏரோநாட்டிக்கல் பயின்று வருவதாகவும், போரின் காரணமாக எனது மகன் சுரங்கங்களில் தவித்து வருகிறார் எனவும், தமிழக அரசு எனது மகனை விரைந்து மீட்டுத்தருமாறும் கூறியுள்ளார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சகாய ஆண்டனி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தனது மகள் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருவதாகவும், தற்போது ருமேனியா எல்லைப்பகுதியில் தவித்து வருவதாகவும் கூறியுள்ளார். எனது மகளுடன் சில மருத்துவ மாணவிகளும் எல்லைப்பகுதியில் இருப்பதாக கூறிய அவர் அவர்களை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து குமரி மாவட்டத்தில் வசிக்கும் எதழ்பிரட் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தனது மகள் அபர்ணா ஸ்வீட்டி உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருவதாக கூறியுள்ளார். தற்போது ருமேனியா எல்லைப்பகுதியில் அவளது தோழி சிலருடன் உணவின்றி தவித்து வருவதாக கூறியுள்ளார். எனவே தமிழக அரசு தனது மகளையும் அவளுடன் இருக்கும் மற்ற மாணவிகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.