Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் தொடரும் பதற்றம்…. இந்திய மாணவர்கள் உணவின்றி தவிப்பு…. தமிழக ஓட்டல் உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 6-வது நாளாக தொடர்ந்து ஆக்ரோஷமான போரை மேற்கொண்டு வருகிறது. தற்போது உக்ரைனின் முக்கியமான நகரங்களை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையில் உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உட்பட இந்தியர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடைபெற்று வருவதால் தலைநகர் கிவ், கார்கிவ் பகுதியில் பெரும்பாலானோர் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.

தமிழக மாணவர்கள் பெரும்பாலானவர்களும் இங்கு சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதிலும், உணவுக்காகவும் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் வாட்ஸ்அப் வீடியோக்கள் மூலமாக உதவிகேட்டு வருகிறார்கள். இதனிடையே போர் பதட்டம் அதிகமாகவுள்ள கார்கிவ் பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலசங்கர் என்பவர் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் உள்பட இந்தியர்கள் 1,500 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பாலசங்கர் கார்கிவ் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

அங்கு போர் தொடங்கியதும் பாலசங்கர் தனது மனைவி சோனியாவை நகரத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார். அதன்பின் அவர் மனைவியின் வேண்டுகோளை மீறி போர் நடைபெறும் பகுதிக்கு வந்து மீண்டும் தங்கினார். தற்போது அங்கு அவரது 2 சகோதரர்கள் அப்புகிருஷ்ணன், சுஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்து குண்டு மழைக்கு மத்தியில் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி உதவி வருகிறார்.

கடந்த 5 நாட்களில் பாலசங்கர் தனது உணவகம் மூலம் மற்றும் தன் தொண்டு நிறுவனமான மாறன் அறக்கட்டளையுடன் இணைந்து உணவு பொட்டலங்களை விநியோகித்து வருகிறார். இது குறித்து பாலசங்கர் கூறியதாவது, நாங்கள் உக்ரைனிய தமிழ் சங்கத்துடன் இணைந்து பல வருடங்களாக ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறோம். உக்ரைன் எனது 2-வது தாய் நாடு ஆகும். எனக்கு புதிய வாழ்க்கையை இந்நாடு வழங்கியது. இந்த நாடு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள போது மக்களுக்கு உதவ விரும்புகிறேன். அதன்படி 100-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உணவு, தண்ணீர் இன்றி பதுங்கு குழியில் சிக்கி இருப்பதை அறிந்த நாங்கள், மளிகை பொருட்கள் முடியும் வரை உணவை சமைத்து விநியோகிக்க முடிவு செய்துள்ளோம்.

அதனை தொடந்து மளிகை பொருட்கள் குறைந்து விட்டதாலும் கடைகள் எதுவும் திறக்காததாலும் சமைத்த உணவுக்கு பதிலாக ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம். உணவை கொண்டு செல்லும் போது உக்ரைனிய காவல்துறையினர், ரஷியா ராணுவத்தினர் பலமுறை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்கள் உணவு பொருட்களை பார்த்த பின் அதை கொண்டு செல்ல அனுமதித்தனர். முதல் நாளன்று நான் சந்தித்த சில பேருக்கு உணவுகளை விநியோகித்தேன். பின் மாணவர்கள் தங்களது வாட்ஸ்அப் குழுக்களில் என்னை சேர்த்துள்ளனர். நகரின் புறநகர் பகுதியிலிருந்து மளிகை பொருட்கள் வாங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” அவர் கூறினார்.

Categories

Tech |