உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்கு குழிகளில் தவிக்கிறோம் என உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் கீழ்விளையை சேர்ந்த ஜெயின்ஸ் என்ற மருத்துவ மாணவர் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கிறார். அவருடன் ஸ்டெனிபர் ஜான், பபின், அஜ்மல் அலி போன்ற மாணவர்களும் தங்கியுள்ளனர். இந்நிலையில் ஜெயின்ஸ் தனது அண்ணனுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது, நாங்கள் தங்கியிருக்கும் பகுதியை சுற்றிலும் போர் நடக்கிறது. இதனால் எப்போதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. போர் தொடங்கிய நாள் முதல் நாங்கள் அனைவரும் பதுங்கு குழிகளில் தான் தஞ்சமடைந்து உயிர் வாழ்கிறோம். குடிக்கத் தண்ணீரும், உணவும் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். நாங்கள் 3 நாட்களுக்கு வாங்கி வைத்திருக்கும் உணவை ஒரு நாளைக்கு ஒரு வேளை என்றுதான் பயன்படுத்தி வருகிறோம். கடைகளில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இங்கிருந்து போலந்து, ருமேனியா, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு தப்பி செல்வது என்றால் 1500 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். ஆனால் 40 கி.மீ தொலைவில் தான் ரஷ்யா இருக்கிறது. எனவே நட்பு நாடான ரஷ்யாவுக்கு செல்ல இந்திய அரசு பேசி அனுமதி வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த 200 மாணவ மாணவிகள் நாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் உள்ளனர். இந்திய அரசின் வெளியுறவுத்துறை பத்திரமாக இருக்குமாறு தெரிவித்துள்ளனர். எனவே விரைந்து எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயின்ஸ் கூறியுள்ளார்.