இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடுகள், பிற ஜனநாயக நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என உக்ரைன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலையில் தொடங்கியது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தலைநகர் கீவை ரஷ்ய வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும், ரஷ்ய வீரர்கள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பெருமளவு உயிர்சேதமும் மற்றும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தாக்குதல் தீவிரம் அடைந்து கொண்டே தான் வருகிறது.
இந்த நிலையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா,மற்ற ஜனநாயக நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இன்னா சோவ்சுன் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறியதாவது, சூழ்நிலையின் அனைத்து புவிசார் அரசியல் சிக்கல்களையும் நான் புரிந்து கொள்கிறேன். எனவே இந்தியா போன்ற அனைத்து ஜனநாயக நாடுகளும் தங்கள் மதிப்புகளுக்காக நின்று ஆதரவு அளிக்க வேண்டும் என இன்னா சோவ்சுன் தெரிவித்துள்ளார்.