பண மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அப்பர் சாலையில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கு ஹோட்டலுக்கு வந்த காந்தராஜ் மற்றும் அவரின் மனைவி சாய்பிரியா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது காந்தராஜ் மற்றும் சாய்பிரியா ஆகியோர் தாங்கள் சொந்தமாக கோயம்புத்தூரில் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருவதாகவும், தற்போது பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஒப்பந்தம் எடுக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும், அதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் நீங்களும் பார்ட்னராக சேர்ந்த கொள்ளலாம் என ஆறுமுகத்திடம் கூறியுள்ளனர்.
பின்னர் இருவரும் தற்போது தங்களிடம் பணம் இல்லை எனவும், மொத்தப் பணத்தையும் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் பெயரிலேயே ஒப்பந்தம் எடுப்பதாக கூறி உள்ளனர். இவரை நம்பி ஆறுமுகம் அவர்கள் இருவரும் கூறிய 15 வங்கி கணக்குகளில் 25,80,580 ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளார். இதனையடுத்து பணத்தைப் பெற்றுக்கொண்ட காந்தராஜ் மற்றும் சாய்பிரியா ஆகியோர் ஆறுமுகம் பெயரில் ஒப்பந்தம் எடுக்காமல் அவர்களது பெயரிலேயே ஒப்பந்தம் எடுத்து மோசடி செய்துள்ளனர்.
இதனால் ஆறுமுகம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து ஆறுமுகத்தை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது பற்றி ஆறுமுகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் காந்தராஜ் மற்றும் சாய்பிரியா ஆகியோர் வாடகை வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாய்பிரியா மற்றும் கந்தராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.