கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை தவிர்த்த, 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு 7% வட்டி செலுத்த வேண்டும். இதையடுத்து கடன் வாங்கிய ஒரு வருடத்திற்குள் வட்டி மற்றும் அசல் செலுத்தினால் வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின் போது கூட்டுறவு நிறுவனங்களில் 16 லட்சம் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர் கடனை 2021 பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.
அதனை தொடந்து பயிர் கடன் தள்ளுபடி குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, அதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இனிமேல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு தற்போது எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் பயிர்கடன் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறை தொடர்பாக ஒரே மாதிரியான ஒழுங்குமுறை விதிகளை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறை அதிகாரி கூறியதாவது, கட்டாயம் பயிர் கடன் வழங்க இதுவரையிலும் ஒவ்வொரு சங்கமும் வெவ்வேறு விதிகளை பின்பற்றி பட்டா, சிட்டா ஆகிய ஆவணங்களை பெறுகின்றன.
இதில் பயிர் சாகுபடி செய்வோருக்கு மட்டும்தான் கடனை வழங்க வேண்டும். ஆனால் சொந்தமாக நிலம் வைத்திருந்து சாகுபடி செய்யாமல் பயிர் கடன் வாங்கி, அத்தொகையில் அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது ஆகிய முறைகேடுகள் நடக்கின்றன. இதனை தடுக்க வரும் ஏப்ரல் முதல் அனைத்து சங்கங்களும் கட்டாயம் பின்பற்றும் வகையில், ஒரே மாதிரியான ஒழுங்குமுறை விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி இனிமேல் பயிர் கடன் பெறுவோர் பட்டா, சிட்டா உடன், சாகுபடி செய்ய உள்ள பயிரை குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று வழங்க வேண்டும். இவையே பயிர் சாகுபடி செய்வதற்கான ஆதாரமாக விளங்குகிறது. இதனிடையில் அந்த சான்று வழங்க முடியாத நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து, முந்தைய பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல் சான்று மற்றும் நடப்பாண்டில் சாகுபடி செய்ய உள்ள பயிர் விபரம் தொடர்பாக சுய உறுதிமொழி சான்று பெற்று கடன் வழங்கலாம். இது போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி கடன் வழங்குமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று அவர் கூறினார்.