சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடினார்.
உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு கல்வி மற்றும் வேலைக்காக சென்ற இந்தியாவை சேர்ந்த பிற மாநிலத்தவரும் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உக்ரைனில் சிக்கியுள்ளனர்.
இதனால் அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது மத்திய அரசு சார்பிலும் டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களைத் தொடர்புகொள்ள 044-28515288, 9600023645, 994022644 ஆகிய எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் www.nrtamiltn.gov.in என்ற இணையதளம் மூலம் உதவி கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடியுள்ளார்.
மேலும் அங்கு உள்ள மூன்று மாணவர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் உரையாடிய முதல்வர் அவர்களின் நிலையை கேட்டு தைரியமாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதற்கு முன் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், பணியாளர்களின் பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.