குடோனில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி சாமி பகுதியில் இருக்கும் தோல் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து பற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் அதை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் தவித்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் மீண்டும் தீப்பற்றி எரிய தொடங்கியதால் தீயணைப்பு வீரர்கள் அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தோல் குடோனில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது.