பணமோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் திருவள்ளுவர் நகரில் சண்முகசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற கணவரும் தேவி என்ற தங்கையும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்களிடம் சீட்டு பணம் வசூலித்துள்ளனர். அதாவது தீபாவளிக்காக சீட்டு பணம் வசூலிப்பதாகவும் தீபாவளி பண்டிகையின்போது உங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் இவர்களிடம் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் இவர் தீபாவளிக்கான பரிசுகள் ஏதும் கொடுக்கவில்லை. மேலும் சீட்டு கட்டியவர்கள் தங்கள் பணத்தை திரும்ப கேட்டும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
அதன் பிறகு சீட்டு பணம் ரூபாய் 37 லட்சத்தை எடுத்துக்கொண்டு சண்முகசுந்தரி தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து சீட்டு கட்டி ஏமாந்த பொதுமக்கள் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான சண்முகசுந்தரியை கைது செய்துள்ளனர். அதன்பிறகு சண்முகசுந்தரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.