போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மகளுடன் வந்த பெண் ஒருவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் புதிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சரிதா என்பது தெரியவந்துள்ளது. இவர் சொத்து பிரச்சனை காரணமாக புகார் அளிக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை விற்று தருவதாக சரிதாவின் சகோதரி கூறியுள்ளார். இதனை நம்பி சரிதா தனது அக்காவின் பெயருக்கு சொத்தை மாற்றி எழுதிக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட அந்த இடத்தை சரிதாவின் சகோதரி 28 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் பணத்தை சரிதாவிடம் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சரிதா தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.