உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நலன்களில் எந்த சமரசமும் செய்ய போவதில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல முறை அதனை எச்சரித்துள்ளது. இருப்பினும் தங்களுக்கு உக்ரேன் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை என்று ரஷ்யா கூறி வந்துள்ளது. ஆனால் கிழக்கு உக்ரேனிலுள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் லுகன்ஸ் மற்றும் டன்ஸ்க் மாநிலங்களில் ரஷ்யா கலவரத்தை தூண்டிவிட்டு தனித்தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளது.
அது மட்டுமின்றி ரஷ்யா அங்கு தங்களது படைகளையும் குவித்துள்ளது. இவ்வாறிருக்க ரஷ்யா மறைமுகமாக போர்தொடுக்க ஆயத்தமாகி விட்டது என்று உலக நாடுகள் அதனை எச்சரித்துள்ளது. இதனையடுத்து உக்ரைன் அரசு ரஷ்யாவில் வசிக்கும் தங்களது மக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.