சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத வார்டு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீத வார்டுகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்ட போது 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்தும், வார்டு மறுவரையரை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் முத்துராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மறுவிசாரணை குறித்து தேதி அறிவிக்கப்படாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், தேர்தல் நடவடிக்கை தொடங்கிய பிறகு தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.