பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் வேப்பூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் ஆண்டி குரும்பலூர் கிராமம் வழியாக செல்லும் டவுன் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
எனவே அப்பகுதியில் இருக்கும் சாலையில் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.