தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுத உள்ள 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை விரைவில் நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளது.
இந்த கல்வி ஆண்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மாணவர்களுக்கான பாட திட்டங்களை முடிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை, பாடத்திட்ட குறைப்பு, மீண்டும் வகுப்பு, தேர்வுக்கு தயார்படுத்துதல் உள்ளிட்ட அனைத்திலும் தினமும் ஒரு மாற்றம். இதனால் மாணவர்களுக்கு கற்பித்தலில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து பொது தேர்வு போல் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று விடைத்தாள் மதிப்பீடு மையம், வேறு ஆசிரியர்கள் மதிப்பீடு என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆனதால் அந்த மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு அட்டவணையை நான்கு முறை மாற்றி மாற்றி வெளியிட்டு பெரும் அவதிக்குள்ளாகினர்.
அந்த வகையில் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்காமல் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வர வைக்க ஏதேதோ பயிற்சிகளை வழங்குவது. பின்னர் பள்ளி தொடங்கியதும் அவற்றை ரத்து செய்தது. இவற்றால் எந்த பலனும் கிடைக்காது. அதேபோல் அமைச்சர் ஒரு அறிக்கை விடுவது, அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் வேறு வழிமுறைகளை வெளியிடுவது என மாற்றி மாற்றி கல்வித்துறையின் குழப்பமான செயல்பாடுகளால் மாணவர்களை சரியாக கவனிக்க வழியில்லாமல் உள்ளது” என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.