சங்கரன் கோவிலில் நீரில் மூழ்கி மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அழகு பொன்னையா என்பவரின் மனைவி இந்திரா மற்றும் மகள் சுமித்ரா வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது தன்னுடைய மகள் சுமித்ரா நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளார். அதை பார்த்த இந்திரா நீரில் மூழ்கியுள்ள மகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

ஆனால் இந்திராவுக்கும் நீச்சல் தெரியாததால் அவரும் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த ஆனந்தச்செல்வி என்பவரும் அவர்களை காப்பாற்ற முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.