அரியலூரில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாலிபர் உயிரிழக்க 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாரதிராஜா. இவரது தந்தை கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். பாரதிராஜா ஐடிஐ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பணிக்கு சென்று வீடு திரும்பிய பாரதிராஜா தனது மோட்டார் சைக்கிளில் அரியலூர் to செந்துறை நெடுஞ்சாலையில் நிதானமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே தாறுமாறாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வாகனம் பாரதிராஜாவின் வாகனத்தோடு நேருக்கு நேர் மோதியது. இதில் பாரதிராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழக்க தாறுமாறாக வாகனத்தை ஓட்டிவந்த ஜானகிராமன், சக்தி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
பின் விபத்து குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட விரைந்து வந்த அவர்கள் படுகாயமடைந்த இருவரின் உடலையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த பாரதிராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பின் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.