தேர்தலில் வாக்களிக்க வந்த முதியவரிடம் பெண் ஊழியர் ஒருவர் வேறு சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகில் திட்டுவிளையில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு காலை 11 மணியளவில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் அந்த முதியவரிடம் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியுள்ளார். அதன்பின் வாக்களித்துவிட்டு வெளியே சென்ற முதியவர் வாக்குச்சாவடி மையத்தின் வெளியே நின்ற கட்சி அலுவலர்களிடம் தான் தென்னை மரச் சின்னத்தில் வாக்களிக்க வந்துள்ளதாகவும், ஆனால் உள்ளே இருந்த பெண் அலுவலர் ஒருவர் வேறு ஒரு சின்னத்தில் வாக்களிக்குமாறு என்னிடம் கூறியதாகவும் அங்கு நின்றவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனைகேட்ட தென்னை மரச்சின்னத்தில் நின்ற வேட்பாளர் மரிய அற்புதம் என்பவர் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே இருந்த பெண் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் அங்கு நின்ற மற்ற கட்சி அலுவலர்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்து சம்பந்தப்பட்ட பெண் அலுவலர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறிய பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் 50 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.