கொரடாச்சேரி அருகே வயலில் கச்சா எண்ணெய் படலம் பரவியதால் விவசாயி அதிர்ச்சியடைந்தார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே இருக்கும் எருக்காட்டூர் ஊரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக வயல் உள்ளது. அந்த வயலுக்கு அடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் வயலில் நெல் அறுவடை பணிகள் நடந்தன. கடந்த 16 ஆம் தேதி காலை நடராஜன் தன் வயலுக்கு சென்று பார்த்தபோது வயலில் கச்சா எண்ணெய் படலம் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, வருவாய்த்துறை மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதன் பேரில் வெள்ளக்குடி ஓ.என்.ஜி.சி. தலைமை பொறியாளர் மாரிநாதன் தனது குழு உடன் நேரில் சென்று கச்சா எண்ணெய் படலம் காணப்பட்ட வயலை ஆய்வு செய்தார். இதே போல மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி சக அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வு குறித்து ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறியதாவது, ‘கச்சா எண்ணெய் குழாய் உடைந்திருந்தால் தொடர்ந்து கச்சா எண்ணெய் கசிந்து கொண்டே இருக்கும்.
ஆனால் அது போல் நிகழவில்லை, குறிப்பிட்ட அளவில் எண்ணெய் படலம் பரவி உள்ளது. எதன் காரணமாக வயலில் கச்சா எண்ணெய் படலம் பரவி உள்ளது ? என்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும், மேலும் எண்ணெய் மாதிரி எடுத்து அனுப்பிய பிறகு ஆய்வு முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினர்.
ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தான் கச்சா எண்ணெய் வயல் முழுவதும் பரவி உள்ளதா? இல்லையெனில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பற்றி ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஓ.என்.ஜி.சிகுழாய் உடைந்ததன் காரணமாக வயலில் கச்சா எண்ணெய் வெளியேறி பரவியதாக தகவல் வெளியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.