மரக்கட்டைகளை துளையிடும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள முத்தானூரில் கஜேந்திரன் (வயது 29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஷோபா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தை அதே பகுதியை சேர்ந்த குமார் (37) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கஜேந்திரன் டிரில்லர் இயந்திரத்தின் உதவியுடன் மரக்கட்டைகளை துளையிட்டு கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த நாமக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஜேந்திரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.